வங்கி வைப்பாளர்களின் 57 மில்லியன் கணக்குகள் பாதுகாக்கப்படும்.

ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப் போவதில்லை என்றும், வங்கிக் கணக்கு வைப்பாளர்களின் 57 மில்லியன் வங்கிக் கணக்குகளையும் பாதுகாப்பதை உறுதி செய்வதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வங்கித் துறையில் சரிவு ஏற்பட்டால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதால் வங்கித் துறையைப் பாதுகாக்க வேண்டியது அத்தியாவசியமானது என்பதோடு, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கு பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ளும் வரையில் பணப்புழக்கம் தொடர்பிலான ஊகங்களை தடுப்பதற்காகவே வெள்ளிக்கிழமை (30.06) வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

ஊழியர் சேமலாப நிதியத்தின் மீது கைவைக்கும் எண்ணம் இல்லையென உறுதியளிக்கும் மத்திய வங்கி ஆளுநர், ஊழியர் சேமலாப நிதியத்திற்கு குறைந்தபட்சம் 9% வட்டி வீதத்தை உறுதிப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இன்று (29.06) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்கள, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, திறைசேரியின் செயலாளர் ஏ.கே.செனவிரத்ன ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில், ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க,
”அரசாங்கத்தின் கடன்களை நிலையான தன்மைக்கு கொண்டு வர வேண்டுமெனில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாடுகளுக்கமைய 10 வருடங்களுக்குள் ஒரளவு ஸ்திரமான தன்மையை பேண வேண்டியது அவசியமாகும். உதாரணமாக கூறுவதாயின் 2022 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மொத்த தேசிய உற்பத்தி வீதம் 128 ஆக பதிவாகியது. இருப்பினும் 2032 ஆம் ஆண்டில் 95 சதவீதமென்ற குறைந்த சதவீதத்திற்கு கொண்டு வர வேண்டியிருந்தது. அதுவே முதலாவது அளவுகோலாகும். அடுத்தாக அரசாங்கத்தின் வருடாந்த நிதிசார் தேவைகள் தற்போது 34.6% சதவீமாக காணப்படுகின்ற நிலையில் 2027- 2032 வரையான ஐந்து வருடங்களில் 13% சதவீதம் அல்லது அதற்கு குறைந்த மட்டத்திற்கு கொண்டு வர வேண்டியது அவசியமெனவும் மூன்றாவது அளவுகோலாக தற்போது 9.4 % ஆக காணப்படும் வெளிநாட்டு கடன் சேவைகளை 2027- 2032 வரையான காலப்பகுதியில் 4.5% சதவீமாக வரையறுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.

மேற்படி இலக்குகளை அடைந்துவிட்டால் மேலதிக நிதி இடைவெளி (external financing gap) இனை நிரப்புவதற்கான சலுகையாக 16.9 அமெரிக்க டொலர்கள் குறைவடையும். குறித்த இலக்குகளின் நிறைவில் மேலும் மூன்று விடயங்களை சாத்தியமாக்கிகொள்ள வேண்டியது அவசியமாகும்.

அதற்காக முதலில் உத்தியோகபூர்வமான கடன் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும். அது தொடர்பிலான பேச்சுக்கள் இடம்பெற்ற வருகின்றன. அடுத்ததாக வணிக ரீதியில் தனியார் பிணைமுறிகளாக பெற்றுக்கொண்ட பணம், அது தொடர்பிலும் கலந்துரையாடப்படுகிறது. மூன்றாவதாக உள்நாட்டு கடன்கள் ஓரளவு மறுசீரமைப்புச் செய்தல் உள்ளிட்ட முயற்சிகள் ஊடாக கடன் நீடிப்புக்களை மேற்கொள்ள முடியும்.

உள்நாட்டு கடன் மறுசீuமைப்பின் போது அரசின் மொத்த நிதித் தேவைக்காக (Gross Financial need) பெறப்படும் கடன்களை குறைப்பது அவசியமாகும். அதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைகளை செயற்படுத்தினால் 12.7 சதவீத்தினால் குறைத்துக்கொள்ள முடியும். 13 ஐ விடவும் குறைந்த மட்டத்தில் அதனை பேண வேண்டும். அதனை சரியாக செயற்படுத்தினால் மூன்று தசம் அளவிலான இடைவெளியொன்றும் உருவாகும். இதனை சரியாக செயற்படுத்தினால் மொத்த தேசிய உற்பத்தி விகிதத்தின் கடன் தொகை சதவீத அடிப்படையில் 90% ஆக குறைவடையும்.

தற்போது திறைசேரியின் கடன் பத்திரங்கள் 4.1 டிரில்லியன்களாக காணப்படுகின்றது. அவற்றில் 62.4% மத்திய வங்கியிடமே உள்ளது. நாம் அறிந்த வகையில் திறைசேரியின் கடன் பத்திரங்களை நீடிக்கப்பட்ட திறைசேரி பிணைமுறிகளாக மாற்றுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. அது போதுமானதல்ல என்பதால் மிகுதி தொகையை பெற்றுக்கொள்வதற்காக நாம் திறைசேரி பிணைமுறிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. தற்போது 8.7 டிரில்லியன்கள் பெறுமதியான திறைசேரி பிணைமுறிகள் காணப்படுகின்றன. 36.5% (superannuation fund) இலும் 36% சதவீதமானவை வங்கிகளிலும் காணப்படுகின்றன. ஏனைய பகுதிகள் காப்புறுதி மற்றும் தனியார் நிறுவனங்களிடத்தில் உள்ளன.

இங்கு மத்திய வங்கி கட்டமைப்பு மற்றும் EPF ஆகியவற்றை பாதுகாக்க முயற்சிக்கின்ற அதேநேரம் ஊழியர் சேமலாப நிதியத்தின் பொறுப்பாளராகவும் மத்திய வங்கியே செயற்படுகின்றது.

அந்த நிலைப்பாட்டிலிருந்தே மத்திய வங்கி இந்த விடயத்தில் தலையீடு செய்கிறது. அதற்கமைய மக்களின் வைப்புக் கணக்குகள் மற்றும் EPF போன் பொது நிதியங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே மத்திய வங்கி மேற்படி செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு இணங்கிச் செயற்படுகின்றது.

இந்த யோசனைகளில் அடிப்படையில் பார்க்கின்ற போது வங்கிகள் தற்போதும் அரசாங்கதின் கடன் சுமைகளை குறைப்பதற்கு அவசியமான பெரும் பங்களிப்பினை வழங்கியுள்ளன. குறிப்பாக தற்போது 50 சதவீத்திற்கும் அதிகமான வரிகளை வங்கிகளே செலுத்துகின்றன. அவற்றில் 30% நிறுவன வரியாகவும், 18% சதவீதம் நிதிச் சேவை வரியாகவும், 2.5% சமூக பாதுகாப்பிற்கான உதவியாகவும் வழங்கப்படுகின்றது.

அதற்கமைய தற்போதும் வங்கிகளின் வருமானத்தில் 50% சதவீத்தை அரசாங்கத்திற்கு செலுத்தி பங்களிப்பினை வழங்கி வருகின்றன. அதற்கு நிகராக (superannuation fund) நிதியங்கள் 14% வீதம் என்ற குறைந்த மட்டத்திலேயே வரிகளை அறவிடுகின்றன.

அதன்படி முதலாவது விடயத்திற்கு வங்கிக் கட்டமைப்பிடமிருந்து தற்போதும் ஒத்துழைப்பு கிடைக்கிறது. இரண்டாவது விடயம், கடந்த காலங்களில் நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக கடனை செலுத்துவதில் வங்கிகள் சிரமத்தை எதிர்கொண்டிருந்தன. மேலும் வழங்கப்பட்ட சலுகை காலங்களின்படி, கடன்களை மீளச் செலுத்தாமையினால் டிரில்லியன் கணக்கிலான நட்டத்தையும் எதிர்கொண்டுள்ளன. அத்தோடு கடந்த காலங்களில் 1.6 டிரில்லியன்கள் பெறுமதியான சலுகை காலத்தை வழங்கியுள்ள நிலையில் தற்போதும் வங்கி கட்டமைப்பினால் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு கிடைக்கின்றது.

அதேபோல் வங்கி கட்டமைப்புக்களை பாதுகாத்தல் மற்றும் வைப்பாளர்களின் பணத்திற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு பாதுகாத்தல் என்பன முதன்மை பொறுப்புக்களாகும். அவர்களும் வரியின் ஊடாக பொருளாதாரத்திற்கும் திறைசேரிக்கும் பெருமளவான பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர்.

வங்கிகளுக்குள் காணப்படும் கணக்கு வைப்பாளர்களின் கணக்குகளின் எண்ணிக்கை 57 மில்லியன்களாக காணப்படுகின்றது. நாட்டிலிருப்பது 20 மில்லியன் மக்கள் தொகையாக உள்ளபோதும் 57 மில்லியன் வங்கிக் கணக்குகள் காணப்படுகின்றன. அந்த நிதிக்கு பாதிப்பு ஏற்படுமாயின் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். ” மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version