பதவிக்கு ஆசைப்படும் அரசியல் தவளைகள் அகற்றப்பட வேண்டும்!

நமது நாட்டில் பல்வேறு இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மதங்களை பின்பற்றும் பலர் உள்ளனர் எனவே நாம் ஒரு நாடாக ஒன்றிணைந்து ஒன்றுபட வேண்டும், பிரிவினைவாதம் ஒன்றே இந்த நாட்டை அழிக்கும் என்பதனால், எந்த ஒரு இனத்தையோ, மதத்தையோ சேர்ந்த யாரும் தீவிரவாதத்தை ஏற்கக் கூடாது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அனைத்து இனங்களையும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விசுவாசிகள் எந்த பேதமும் இன்றி ஒரே தாயின் பிள்ளைகள் போல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

காலி ஸாஹிரா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தீவிரவாதத்தை போலவே எந்த பயங்கரவாதத்திற்கும் எமது நாட்டில் இடமில்லை என்றும்,எனவே அனைத்து இனங்களும் மதங்களும் ஒன்றிணைந்து அனைத்து இனங்களிலும் மதங்களிலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் தீவிரவாதத்தை தோற்கடிக்க வேண்டும் என்றும்,கடந்த காலங்களில் தீவிரவாதத்தை அரசியல் நோக்கத்திற்காக சில கட்சிகள் பயன்படுத்தின என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கதிரைக்கு செல்லும் ஆசையில் முழு நாட்டையும் துண்டு துண்டாக உடைத்து தேசிய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அவர்கள் அழித்தார்கள் எனக் கூறிய அவர், ஜனாதிபதி கனவுக்காக,யுத்த வெற்றியின் பின்னர் அனைத்து இனங்களும் சமூகங்களும் ஒன்றிணைந்து ஒரு நாடாக அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக இனவாதத்தைக் கிளறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.

மலட்டு கொத்து மற்றும் மலட்டு அறுவை சிகிச்சைகள் செய்ததாகக் கூறி வைத்தியர் சாபி இடைநீக்கம் செய்யப்பட்டார் என்றும், கோவிட் காலத்தில் தகனமா அடக்கமா என்ற பிரச்சினை வந்த போது உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களைக் கூட மறந்து விட்டு செயற்பட்டனர் என்றும், இதன்போது, வீதிகளில் இறங்கி குரல் எழுப்பியது ஐக்கிய மக்கள் சக்தியே என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன,மத முரண்பாடுகளை உருவாக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும்,ஐக்கிய மக்கள் ஆட்சியில் அரசாங்கத்தின் கீழ் எந்த இனமும் மற்றொரு இனத்திற்கும் எந்த மதமும் மற்றொரு மதத்திற்கும் பிரிவினையை உண்டாக்கும் விதமாக செயற்பட்டாலோ அல்லது அவ்வாறு கருதப்பட்டாலோ அது குற்றச் செயலாகக் கருதப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இனவாதம் இல்லை என்று சொல்லும் கட்சி தற்போது ஒன்று சோர்ந்து திருடுவதாகவும், கடந்த வெள்ளிக்கிழமை, மக்களை வாழ வைப்பதா அல்லது மக்களை மயானத்திற்கு அழைத்துச் செல்வதா என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை 225 பேருக்கும் ஏற்ப்பட்ட போது,மக்களை வாழ வைக்க 74 பேர் மட்டுமே நின்றதாகவும்,134 அடிமைகள் மக்களைக் கொல்லும் பக்கம் நின்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அமைச்சுப் பதவிக்கு ஆசைப்படும் அரசியல் தவளைகள் இந்த அரசியல் களத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றும்,அவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியானவர்களின் சடலங்களுக்கு மேல் சென்று அரசாங்கத்தை கைப்பற்றினர் என்றும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார் என்றும், இதற்கு இதுவரையில் எந்த நீதியும் நிலைநாட்டப்பட்டதாக இல்லை என்றும், இதில் உண்மை மறைக்கப்பட்டு,பொய் ஆட்சி செய்ததாகவும்,ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் வெளிக்கொணரும் வகையில் விசாரணை நடத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வாக்குறுதியளித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version