இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளராக சண்முகம் குகதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்தினை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று திருகோணமலையில் உள்ள தனியார் விருந்தகத்தில் நடைபெற்றது.
இதன்போது, மத்திய செயற்குழுவினால், இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகம், பொதுச் சபைக்கு பிரேரணை ஒன்றாக முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
பொதுச் சபையில் பிரேரணை முன்வைக்கப்பட்டதையடுத்து கருத்து முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில் மத்திய செயற்குழுவால் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடாத்துவதற்கு பொதுச் சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது வாக்கெடுப்பு நடாத்தப்பட்ட நிலையில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் அளிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நாளை (28) நடைபெறவிருந்த கட்சியின் புதிய தலைவரின் பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராசா அறிவித்துள்ளார்.