தோலை வெண்மையாக்கும் அழகு சாதனப் பொருட்களின் பாவனையின் காரணமாக இலங்கையில் சிறுநீரக நோய்க்கு உள்ளாகுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் பாதரசத்தின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்கான வேலைத்திட்டத்தை உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து இலங்கை சுகாதார அமைச்சு முன்னெடுத்து வருவதாகவும், பாதரசம் கலக்கப்பட்டுள்ள அழகுசாதன பொருட்களின் பயன்பாட்டினால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் எனவும் தோல் நோய்கள் தொடர்பான நிபுணர் வைத்தியர் இந்திரா கஹாவிட்ட தெரிவித்துள்ளார்.
24 மணித்தியாலங்களில் 40 வைத்தியசாலைகளிலிருந்து சுமார் 60 நோயளர்களிடையே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, 10 சதவீதம் பேர் தோலை வெண்மையாக்கும் அழகு சாதனப் பொருட்களினால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என வைத்தியர் இந்திரா கஹாவிட்ட சுட்டிக்காட்டியுள்ளார்.
நோயளர்களிடையே, உள்ளங்கைகள் கருமையாகுதல் மற்றும் விரல் நகங்கள் நிறம் மாறுதல் உள்ளிட்ட அறிகுகளின் அதிகரிப்பை கடந்த சில மாதங்களாக அவதானிக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய குறுகிய கால பக்க விளைவுகள் அதிகரிப்பதுடன், புற்றுநோய் நிலைமை ஏற்படுவதற்கு முன்பே பாரிய நோய் நிலைமைகள் ஏற்படுவதாக தோல் நோய்கள் தொடர்பான நிபுணர் வைத்தியர் இந்திரா கஹாவிட்ட தெரிவித்துள்ளார்.