இவ்வளவு காலமும் ரணில் விக்ரமசிங்க ஆட்சியிலிருந்த போதும், வழங்காத 1,700 ரூபா சம்பளத்தை, தேர்தலுக்கு 11 நாட்களுக்கு முன்பு வழங்கவுள்ளமை தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு உறுப்பினரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் தெரனியாகல தொகுதி அமைப்பாளருமான முருகேசு பரணிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், வாங்கிய காசுக்குக் கூவுவதற்காக பல்வேறு தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை முன்வைத்து வருவதாக ஊடக சந்திப்பொன்றின் போது முருகேசு பரணிதரன் தெரிவித்துள்ளார்.
பல வருட காலமாக பெருந்தோட்ட மக்களை ஏமாற்றி வரும் ரணில் விக்ரமசிங்க, வாக்குகளுக்காக இம்முறையும் பெருந்தோட்ட மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான இராதாகிருஷ்ணன் மற்றும் உதயகுமார் ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதாக முன்வைத்த கருத்துக்கள் கட்டுக்கதை என்றும், குறித்த இருவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைவதற்கான எவ்வித தேவைகளும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.