
ஹெல ஜன கலாச்சாரத்துறையை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் தனியான பிரிவொன்று நிறுவப்படும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஹெல ஜன கலாச்சார மாநாடு நேற்று (08.09) இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
கலாச்சார திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களை ஒன்றாக இணைத்து ஹெல ஜன கலாச்சாரத்திற்கான தனியான ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவுவோம்.
இந்தத் துறையில் உள்ளவர்களை முறையாக பதிவு செய்து அனைவருக்கும் அடையாள அட்டைகளை வழங்குவதோடு, பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றின் ஊடாக சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சமூகமாக கௌரவமான வரவேற்பை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
இந்த கலாச்சார செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போது நிதி ரீதியான சிக்கல்கள், பொருள் ரீதியான சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இந்த கலைத்துறை அறிவை புதிய பரம்பரைக்கு எடுத்துச் செல்வதற்கான வேலைத்திட்டங்கள் இல்லாமையால், பிரதேச செயலாளர் மட்டத்தில் இதை முறையாக செயல்படுத்துவதற்கு இந்தத் துறையோடு சம்பந்தப்பட்ட அனைத்து குழுக்களையும் இணைத்து, இந்தத் துறையில் உள்ளவர்களை உத்தியோகபூர்வமாக ஏற்று, கௌரவத்தைப் பெற்றுக் கொடுப்பதோடு, அனைத்து பிரதேசங்களிலும் காணப்படுகின்ற கலை நிலையங்களை பலப்படுத்துவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அத்தோடு இந்த பாரம்பரிய கலாச்சார நடைமுறைகளை சுற்றுலா துறையோடு இணைக்கின்ற போது அதனூடாக நாட்டிற்கு பாரிய அளவிலான அந்நிய செலாவணியை ஈட்ட முடியும். இதுகுறித்து தலைவர்களின் கவனம் ஈர்க்கப்படவில்லை.
கலாச்சாரத்துக்கும் நாகரிகத்துக்கும் பெருமதியை சேர்க்கின்ற ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டமையும் இந்த துறைக்கு வழங்க வேண்டிய கௌரவத்தையும் வரவேற்பையும் பெற்றுக் கொடுக்கும் என எதிர் கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.