LPL – கண்டி தடுமாறி மீண்டது

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரின் ஆறாம் நாளான இன்று கண்டி பல்கோன்ஸ், கோல் மார்வல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி தம்புள்ளை ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோல் மார்வல்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய கண்டி அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது. முதல் ஓவரில் டுவைன் பிரட்டோரியஸ்ஸின் பந்துவீச்சில் டினேஷ் சந்திமால் 01(03) ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அன்றே பிளட்சர் தனித்து நின்று போராடி ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தமையினால் கண்டி அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. இரண்டாவது ஓவரில் மொஹமட் ஹரிஸ் இசுரு உதானவின் பந்துவீச்சில் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். ஆறாவது ஓவரின் முதற் பந்தில் கமிந்து மென்டிஸ் 10(10) ஓட்டங்களுடன் இசுரு உதானவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து 2 பந்துகளை எதிர்கொண்ட பவான் ரத்நாயக்க ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். அன்றே பிளட்சருடன் இணைந்து அஞ்சலோ மத்தியூஸ் இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கி அணியை மீட்டு எடுக்க ஆர்மபித்த வேளையில் அன்றே பிளட்சர் 50(36) ஓட்டங்களுடன் மஹீஸ் தீக்ஷனவின் பந்துவீச்சில் 12 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அணி இக்கட்டான சூழ் நிலையில் காணப்பட்ட போது அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க அஞ்சலோ மத்தியூசுடன் இணைந்தார். 58 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பூர்த்தி செய்தவேளையில் அஞ்சலோ மத்தியூஸ் 25(27) ஓட்டங்களுடன் ஷகூர் கானின் பந்துவீச்சில் வெளியேறினார். 19 ஆவது ஓவரில் தஸூன் சாணக்க 09(04) ஓட்டங்களுடன் ஷகூர் கானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதி வரை அதிரடி நிகழ்த்தி வனிது ஹசரங்க 65(32) ஆட்டமிழக்காமல் ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களை கண்டி பல்கோன்ஸ் அணி பெற்றுக்கொண்டது.

இசுரு உதான 4 ஓவர்கள் பந்துவீசி 30 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்களை கைப்பற்றினார். மஹீஸ் தீக்ஷண 4 ஓவர்களில் 32 ஓட்டங்களை வழங்கி 1 விக்கெட்டை கைப்பற்றினார். ஷகூர் கான் 4 ஓவர்கள் பந்துவீசி 29 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்களை கைப்பற்றினார். டுவைன் பிரட்டோரியஸ் 4 ஓவர்கள் பந்துவீசி 40 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார்.

கண்டி அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றியினை பெற்றுள்ள நிலையில் 2 புள்ளிகளோடு நான்காமிடத்தில் காணப்படுகிறது. கோல் மார்வல்ஸ் அணி மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பெற்று 4 புள்ளிகளோடு மூன்றாமிடத்தில் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்ததாக அமைகிறது.

அணி விபரம்

கண்டி அணி சார்பாக சத்துரங்க டி சில்வா நீக்கப்பட்டு லக்ஷான் சந்தகான் சேர்க்கப்பட்டுள்ளார்.

காலி அணியில் மல்ஷா தருப்பதி நீக்கப்பட்டு கவிந்து நதீஷான் இணைக்கப்பட்டுளார்

கண்டி பல்கோன்ஸ் – வனிந்து ஹசரங்க, அஞ்சலோ மத்தியூஸ், டுஸ்மந்த சமீர, கமிந்து மென்டிஸ், அன்றே ப்லட்சர், டினேஷ் சந்திமால், தஸூன் சாணக்க, பவான் ரத்நாயக்க, சொரிபுல் இஸ்லாம், மொஹமட் ஹரிஸ்

கோல் மார்வல்ஸ் – பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஸ் தீக்ஷண, ரிம் ஷெய்பேர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜனித் லியனகே, டுவைன் ப்ரட்டோரியஸ், ஷஹான் ஆராச்சிகே, ஷகூர் கான், , இசுரு உதான,கவிந்து நதீஷான்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version