ஜனவரி முதல் இன்று வரை 100,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 28ஆம் திகதி வரையில் 101,872 சுற்றுலாப் பயணிகளும், நவம்பர் முதலாம் திகதி முதல் நேற்று (28/11) வரை 41,177 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்த மாதத்தில் வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவிலிருந்து மொத்தம் 13,368 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர், அதே நேரத்தில் இந்தியாவுக்குப் பிறகு கடந்த 28 நாட்களில் ரஷ்யாவிலிருந்து 3,449 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
மேலும், இங்கிலாந்து, பாகிஸ்தான், ஜெர்மனி, மாலைத்தீவு, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
இந்த வருட இறுதிக்குள் 150,000 முதல் 180,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கணித்துள்ளது.
அடுத்த வருடத்திற்குள் சுற்றுலாத்துறை படிப்படியாக மீளும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நம்பிக்கை கொண்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.